''புதியதாக குடும்ப அட்டை கேட்டு மனு அளிப்பவர்களுக்கு 60 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்'' என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு பொது வினியோக திட்டத்தை அறிவித்துள்ளார். விலைவாசியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நியாயவிலை கடைகளில் தற்போது ரவை, மைதா, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் கோதுமை மாவும் வழங்கப்படும். இது குறித்து கூட்டுறவு துறை இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
புதியதாக குடும்ப அட்டை கேட்டு மனு அளிப்பவர்களுக்கு 60 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்குவதற்கு காலதாமதம் ஆனால், அதற்கான காரணத்தை விண்ணப்பதார்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சிவில் சப்ளை கடைகளில் 100 விழுக்காடு பணியாளர்கள் உள்ளனர். கூட்டுறவு கடைகளில் 27 ஆயிரத்து 307 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மீதியுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.