மருத்துவர்கள், ஊழியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புகார் பெட்டி வைக்கப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார். அங்கு மற்றவர்களுக்கு ஏற்பட்டது சாதாரண காய்ச்சல்தான். தமிழகத்தில் எங்கும் விஷக்காய்ச்சல் இல்லை. அரசு மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலால் நோயாளி அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் கூறினார்.
தமிழக மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தற்காலிக ஊழியர்களை நியமித்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் பற்றாகுறை இல்லை. ஏற்கனவே, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பு வைத்திருக்கிறோம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட ஊழியர்கள் சரியாக சிகிச்சை அளிக்காவிட்டாலோ, சேவை குறைபாடு தொடர்பாகவோ அரசுக்கு புகார் தெரிவிக்க பொதுமக்கள் விரும்பினால் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது எனக்கோ எழுத்து மூலம் புகார் தெரிவிக்கலாம். அதேநேரத்தில் ஏழை மக்கள் வசதிக்காக எல்லா மருத்துவமனைகளிலும், மனிதாபிமான நோக்கோடு புகார் பெட்டிகளை விரைவில் வைக்கப்படும். புகாரில் கூறப்பட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.