உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சமீப காலமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் மிக மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தினந்தோறும் 10 முதல் 15 தமிழ் இளைஞர்கள் இறக்கிறார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மெளனம் சாதிப்பது முறையல்ல. ஈழத் தமிழர்களின் சுய நிர்ண உரிமையை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
மருந்து, உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி நடத்தப்படுகிறது. பேரணி முடிவில் முதலமைச்சரிடம் மனு அளிக்கப்படும். எனது தலைமையில் நடக்கும் பேரணியை பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விமர்சனம் செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு உரிமை இல்லை என டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
இதுபற்றி தேசிய அளவில் விவாதம் செய்ய வேண்டும். ஜனநாயக உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு எந்த அனுமதியும் கேட்க தேவையில்லை என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.