''வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களிட் கூறுகையில், ஒரு மாநில ஆட்சியை நீக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. அது பற்றி வழக்கு வந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். அதுவும் மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது. இது அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் நீதிபதி அகர்வால், “ஆட்சியை கலைக்க சிபாரிசு செய்வோம்” என்று தமிழக அரசைப் பற்றி சட்ட விரோதமாக விமர்சித்து இருக்கிறார். சட்டத்தை மீறி தவறாக நடந்திருக்கும் இந்த நீதிபதி மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 124-வது பிரிவு உள்பிரிவு 4-ன்படி இந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். வரம்புமீறி போகாமல் நீதிபதிகளை பாராளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக சில நீதிபதிகள் சட்டத்துக்கு மாறாக எல்லை மீறி நடக்கிறார்கள். இதை பாராளுமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் சட்டம் வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சட்டத்துக்கு எதிராக தனது உணர்ச்சிகளை காட்டும் நீதிபதி அகர்வால், சேது சமுத்திர திட்டம் மற்றும் ராமர் பிரச்சினை தொடர்பான எந்த வழக்கையும் விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு திராவிடர் கழகம் சார்பில் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதுவேன் என்று வீரமணி தெரிவித்தார்.