பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில்வே பகுதிகளை கேரளத்துடன் சேர்க்க கூடாது என வலியுத்தியும், அறிவித்த முடிவினை ரத்து செய்யக் கோரியும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் வரும் 5ஆம் தேதி பொள்ளாச்சியில் கண்டன பேரணி நடக்கிறது.
கொடையாலும், வீரத்தாலும் சிறந்து உள்ள கொங்கு மண்டலத்தின் ஜீவநாடியான பொள்ளாச்சி-கிணத்துக் கடவு பகுதிகளை ரெயில்வே துறையில் மதுரைக் கோட்டத்தில் இருந்து நீக்கி கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் சேர்க்க மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் செய்து இருக்கும் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் சேர்த்தால் அகலரெயில் பாதை அமைப்பது கிடப்பிலே போடப்படும் அல்லது ஆமை வேகத்தில் நகரும் என்பதோடு இந்தப் பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள், வியாபாரிகள், பயணிகள், ரெயில்வே தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாவார்கள். இந்த முடிவை எதிர்த்து பொள்ளாச்சி பகுதி மக்கள் ஓட்டுமொத்தமாகப் போராடி வருகிறார்கள் என வைகோ நினைவுபடுத்தி உள்ளார்.
பொள்ளாச்சி பகுதியை கேரளத்தில் சேர்க்க கூடாது என வலியுறுத்தவும் அறிவித்த முடிவினை ரத்து செய்யவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன பேரணி எனது தலைமையில் ம.தி.மு.க. பொருளாளர் மு.கண்ணப்பன் முன்னிலையில் அக்டோபர் 5ஆம் தேதி மாலை 3 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெற இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
இந்த கண்டனபேரணியில் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.