ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கரும்பு லாரிகளை தடுத்து கலாட்ட செய்து வந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விரட்டி விட்டனர்.
அந்த காட்டுயானை மீண்டும் பண்ணாரி அருகே வந்து கரும்பு லாரிகளை மறித்து நிற்பதால் வனத்துறையினர் விரக்தியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி அருகே காட்டு யானை ஒன்று நாள்தோறும் சாலையின் ஓரம் நின்று இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை தடுத்து கரும்புகளை பறித்து தின்று வந்தது. அதனை வனத்துறையினர் மிகுந்த சிரமமப்பட்டு அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர். இதுனால் இவ்வழியே செல்லும் பயணிகளும் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே காட்டு யானை திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் நின்றுகொண்டு வழக்கம்போல் கரும்பு லாரிகளை தடுத்தது.
இதனால் கரும்பு லாரி ஓட்டுனர்கள் பயந்து வேகமாக லாரியை ஓட்டிசென்று வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் தலைமையில் வனத்துறையினர் நேற்று இரவு அங்கு வந்து, காட்டுயானையை விரட்ட முடிவு செய்து பட்டாசு வெடித்தனர்.
இதற்கு சற்றும் செவிசாய்க்காத காட்டுயானை சிறிது நேரத்தில் விரட்ட வந்த வனத்துறையினரை விரட்டியது. அந்த நேரத்தில் மாலைப்பாதையில் வந்த வாகன ஓட்டுநர்கள் பீதியடைந்து வாகனங்களை பின்னோக்கி செலுத்தினார்கள்.
வேகமாக வந்த காட்டுயானை திடீரென நிறுத்தி காட்டுக்குள் புகுந்தது.
இதனால் நிம்மதியடைந்த வாகன ஓட்டுநர்கள் வேகமாக கீழ்நோக்கி இறங்கினார்கள். ஆனால் நான்காவது கொண்டை ஊசி வளைவில் இருந்து யாருக்கும் தென்படாமல் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் நின்றுகொண்டு அவ்வழியே வந்த கரும்பு லாரியை தடுத்தது.
கரும்பு லாரியில் இருந்து சிறிது கரும்பு எடுத்து வனப்பகுதிக்குள் போட்டபின் அந்த கரும்பை நோக்கி வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் யானையின் ரகளைக்கு தற்காலிக முடிவு கிடைத்தது.