நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற வாலிபரை பெண் அரிவாளால் வெட்டினார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் யூனியன் ராசிபாளையத்தில் சுடுகாடு அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்காக ரூ.இரண்டு லட்சம் மதிப்பில் இந்திரா நகர், காமராஜர் நகர், ராம் நகர் உள்ளிட்ட ஐந்து கிராமத்தில் வசிக்கும் 500 குடும்பத்தினர் பயன்படுத்த நவீன சுடுகாடு அமைக்கும் பணி உப்பாத்து பாலம் அருகே உள்ள சுடுகாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
ஓடை புறம்போக்கை ஆக்ரமித்து சுடுகாடு அமைப்பதாக அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதையடுத்து ஆணையம் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய உயர்நீதி மன்றம் குழு அமைத்தது. குழு சமர்பித்த அறிக்கையின்படி, ஆக்ரமிப்பு செய்யப்பட்ட சுடுகாடு சுற்றுச்சுவர், தகனமேடை உள்ளிட்டவற்றை அகற்ற உத்தரவிட்டப்பட்டது.ஆக்ரமிப்பு சுடுகாடு சுற்றுச்சுவர், தகன மேடை ஆகியவற்றை வருவாய்துறையினர் அகற்றியதை அடுத்து பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
சுடுகாடு பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ராசிபாளையத்தை சேர்ந்த குட்டியண்ணன் மகன் செந்தில்குமார் (32) பங்கேற்றார். பல்வேறு பிரச்னை குறித்து விவாதித்தனர். கூட்டம் முடியும் நிலையில் முத்துசாமி மனைவி ராஜேஸ்வரி என்பவர் அங்கு வந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் குமாரை சட்டையை பிடித்து இழுத்து தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வெட்டினார். தடுத்த செந்தில்குமாருக்கு கையில் வெட்டு விழுந்தது. அதை பார்த்த பொதுமக்கள் தடுத்தனர். இதனால் செந்தில்குமார் வெட்டுகாயத்துடன் தப்பி மோகனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் ராஜேஸ்வரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.