ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதையில் கடந்த திங்கட்கிழமை கரும்பு லாரிகள் முழுமையாக வராத காரணத்தால் ஏமாற்றமடைந்த யானை இரவு மலைப்பாதையில் அவ்வழியாக வரும் வாகனங்களை மிரட்டியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரியில் இருந்து திம்பம் வரை காட்டு யானை ஒன்று சாலையில் வரும் கரும்பு லாரிகளை மடக்கி அட்டகாசம் செய்து வந்ததுஇதேப்போல கடந்த திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு முதலாவது கொண்டை ஊசி வளைவில் தொடங்கிய கரும்பு யானை வழக்கம்போல் கரும்பு லாரிகளுக்காக காத்து நின்றது.ஆனால் தற்போது பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணிக்காக திங்கட்கிழமை காலையில் இருந்து ஆலை நிறுத்தப்பட்டது. இதனால் திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து கரும்பு லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. கரும்பு லாரிகள் வராததால் ஆத்திரமடைந்த யானை மற்ற வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா என்று சோதித்தது.இது குறித்து தகவல் தெரிந்தவுடன் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி ராமசுப்பிரமணியம் உத்திரவின்பேரில் சத்தியமங்கலம் ரேஞ்சர் சுந்தர்ராஜன், வனவர் நேசமணி, சாமியப்பன் உள்ளிட்டோர் கொண்ட வனக்குழுவினர் பட்டாசு மற்றும் தீ பந்தத்துடன் காட்டு யானை காத்திருக்கும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவுக்கு சென்றனர்.
அப்போது யானை திம்பம் ரோட்டில் இருந்து கீழ்நோக்கி இறங்கி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி தன் துதிக்கையை லாரியின் பின்பக்கத்தில் வைத்து கரும்பு இல்லை என தெரிந்தவுடன் லாரிகளுக்கு வழிவிட்டது.
இதனால் புதியதாக இந்த வழியில் வந்த லாரி டிரைவர்களுக்கு பீதி ஏற்பட்டது. ஆனால் வாகனங்களை எவ்வித அச்சுறுத்தலும் செய்யாமல் இருந்ததால் வனத்துறையினர் யானையை எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தவில்லை.
சிறிது நேரத்தில் மலைப்பாதையில் மேல்நோக்கி நடக்க தொடங்கிய கரும்புயானை காலை ஆறு மணிக்கு திம்பத்தை அடைந்தது. வழியில் தண்ணீர் குடித்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டது.