இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர்.
ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த சங்கர், நெல்சன், வேலு, குருசந்திரன், சரவணன், அமலன், மாணிக்கம், ஸ்டாலின், ஜெயமணி, தேவேந்திரன் ஆகியோர் கடந்த 10ஆம் தேதி கடலுக்கு சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை மீட்க முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதினார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வெளி உறவுத்துறை அமைச்சகத்தை நேரில் தொடர்பு கொண்டு, இதற்கான பணிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து, மீனவர்கள் கடந்த 20ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 10 பேரும் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 6.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் அனைவரும் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.