பேருந்துகளை இயக்க அனுமதியளிக்கும்படி கோரி சென்னையில் பேருந்து டிப்போக்கள் முன்பு அ.தி.மு.க. சார்பு தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து மாநில போக்குவரத்து கழகம் மற்றம் பெருநகர போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சென்னையில் காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை.
பேருந்துகளை இயக்க தங்களை அனுமதிக்கும் படி, அ.தி.மு.க சார்பு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பஸ் டிப்போ முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவர்கள் பல்லவன் டிப்போ, பேசின் பிரிட்ஜ், சைதாப்பேட்டை உட்பட பல பேருந்து டிப்போ முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசுக்கு எதிராக கோஷமிட்டதாகவும் காவல் துறை தெரிவித்தது.
மாநில போக்குவரத்துக் கழகம், மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழகத்தில் இணைந்துள்ள தி.மு.க, மற்றம் அதன் தோழமைக் கட்சி சார்பு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், தமிழக முதல்வரும், தி.மு க தலைவருமான கருணாநிதி, மற்றும் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பணிக்கு செல்லவில்லை.