சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் கருணாநிதி, உடல்நிலை கருதி இடையிலேயே வீடு திரும்பினார்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை 9.00 மணியளவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
பின்னர் 11.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை கருதி அவரைவீடு திரும்புமாறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் வேண்டுதலை ஏற்று உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கருணாநிதி விடைபெற்றார்.
''உண்ணாவிரதம் ஏற்கெனவே தொடங்கி விட்டதால், நான் உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன்'' என்று கருணாநிதி கூறினார்.
முன்னதாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றபோது, உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தபிறகு விடைபெறுமாறு கருணாநிதியைத் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இன்று காலை உள்ள உடல்நிலையைப் பொறுத்து விடைபெறுவதை முடிவு செய்யலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி அப்போது கூறியிருந்தார்.