சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றவலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உண்ணாவிரதங்கள் நடந்து வருகின்றன.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்திருந்தன.
இதனை எதிர்த்து அஇஅதிமுக தொடர்ந்த வழக்கில், முழு அடைப்புப் போராட்டத்திற்குத் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்தன.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் காலை 9.00 மணியளவில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, பா.ம.க நிறுவனர் டாக்டர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.இராஜா, மாநிலச் செயலர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரசுக் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உட்படக் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கோண்டனர்.
உண்ணாவிரதத்தையொட்டி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. சென்னை மாநகரக் காவல்துறைக் கண்காணிப்பாளர் நாஞ்சில் குமரன், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் உட்படக் காவல்துறை உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 8 இடங்களில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இராஜ கோபால் பூங்கா அருகில் தொடங்கிய உண்ணாவிரத்தை திமுக மாவட்டப் பொருளாளர் பெரியண்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். செந்தில் எம்.பி, இல.வேலுச்சாமி எம்.எல்.ஏ, உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பெண்ணாகரம்
பெண்ணாகரத்தில் பெரியண்ணன் எம்.எல்,ஏ தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. காரிமங்களம், கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இடங்களிலும் உண்ணாவிரதம் தொடங்கியது. இவற்றில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவையில் தொடங்கிய உண்ணாவிரத்திற்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி, பழனியில் அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினர். பாலபாரதி எம்.எல்.ஏ உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோலத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
உண்ணாவிரதம் நடப்பதையடுத்து தமிழகம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் வன்முறைகள் நடந்ததாகவும், கடைகள் உடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.