சேது சமுத்திரத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றக் கோரி நாளை விடுக்கப்பட்ட முழு அடைப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து நாளை தமிழகம் முழுவதும் அதேக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் திருவல்லிக்கேணியில் நடைபெறும் என்று கூறினார்.
இதேப்போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆங்காங்கு நடைபெறும் என்று கருணாநிதி கூறினார்.
மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தின் கனவான அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சில நந்திகள் குறுக்கே நிற்கின்றன. அவைகளை புறந்தள்ளிவிட்டு திட்டத்தை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே நாளைய உண்ணாவிரதத்தின் மூலம் மத்திய அரசுக்கு செய்தி விடுப்போம் என்று கூறினார்.