திங்கட்கிழமை நடைபெற இருக்கும் முழு அடைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த முழு அடைப்புக்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து வழக்கில் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதேசமயம் பேருந்து, ரெயில்கள் ஓடுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அசம்பாவித சம்பவங்களும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில, முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முழு அடைப்பு நடத்துவது தேவை இல்லாதது ஆகும். மேலும் இந்த முழு அடைப்பு அரசியல் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் விரோதமானது. மேலும் முழு அடைப்பின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே முழு அடைப்பு போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும், இந்த மனு அவசர வழக்காக இன்று காலை 10-30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீதிபதிகள் பி.என்.அகர்வால், நவ்லேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.