தமிழக அரசு புதிய தொழில் கொள்கையை அறிவிக்க உள்ளது.
சென்னையில் நேற்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் கொள்கை ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் கருணாநிதி கூடிய விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முதலீடு செய்வதை அரசு ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
இரண்டாம் கட்ட நகரங்களில், அலுவலகங்களை அமைக்க ஆர்வம் காட்டும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான நிலம் தமிழக அரசி்ன் தமிழ்நாடு மின்னனு கழகம் (எல்காட்) மூலம் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்., ஹனிவெல் இந்தியா இன்டர்நேஷனல் சர்வீசஸ்., டெசால்வ் சர்வீசஸ்., எஸ்.ஜி.டி இந்தியா., சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ்., சுதர்லான்ட் குளோபல் சர்வீசஸ்., காக்னிசென்ட் டெக்னாலஜி சொலியூசன்ஸ்., ஜெனித் சாப்ட்வேர் ஆகிய நிறுவனங்களுக்கு அலுவலகங்களை அமைக்க மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நிலம் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டல தொழில்நுட்பப் பூங்காவில் சிஃபி லிமிடெட், சுதர்லான்ட் குளோபல் சர்வீசஸ்., காக்னிசென்ட் டெக்னாலஜி சொலியூசன்ஸ்., ஸ்கோப் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களுக்கு, 90 ஆண்டு குத்தகை அடிப்படையில், விலைப்புள்ளிகள் மூலம் நிலம் ஒதுக்கப்படும்.
தற்போது சென்னையில் அலுவலகங்களை அமைத்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள், இரண்டாம் நிலை நகரங்களில் விரிவுபடுத்த விரும்புகின்றன. இதனால் இவைகளுக்கு உற்பத்தி செலவு குறைவதுடன், அந்த பகுதியில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில், முதலீட்டை ஈர்த்து, வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.