ஈரோடு மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்கக் கோரி பவானியில் தொழிலாளிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுக்கா சுற்று வட்டார பகுதிகளில் முறையான அனுமதி பெறாத மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 72 சாயப்பட்டறைகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வாரம் தாசில்தார் வரதராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் "சீல்' வைத்தனர்.
இதானால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறை தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் இவற்றை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்ற வாரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மூடப்பட்ட சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்க வேண்டும், அரசே பொது சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். சாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி தாலுகா அலுவலகம் முன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்தை சி.பி.ஐ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் துவக்கி வைத்தார். சி.பி.ஐ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பா.பா.மோகன் தலைமை வகித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.