போலி கடவுச் சீட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் சென்னை வழியாக கொழும்பு செல்ல முயன்றபோது சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை வவுனியாவைச் சேர்ந்த செல்வரத்தினம் (வயது 51) என்ற அந்த நபர்,கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் தியாகி விஜயேந்திரன் என்பவருக்கு ரூ.5 இலட்சத்தைப் பெற்றுக் கொண்டு போலி இந்திய கடவுச் சீட்டு, இங்கிலாந்து விசா ஆகியவற்றைத் தயாரித்துக் கொடுத்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
இதுதொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எல்லா விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்திருந்தனர். செல்வரத்தினத்தைக் கைது செய்த விமான நிலையக் காவல்துறையினர், பின்னர் அவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேறு யாருக்காவது செல்வரத்தினம் போலியாகப் பாஸ்போர்ட்டுகளைத் தயாரித்துக் கொடுத்தாரா என்பது பற்றி கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.