முதலமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பேசியதை கண்டித்து காரைக்குடியில் பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் மோதி கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதற்காக ராமர் பாலம் இடிக்கப்படக்கூடும் என்று பாரதீய ஜனதா கட்சியினரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராமரை பற்றி விமர்சனம் செய்த முதலமைச்சர் கருணாநிதியின் தலை, நாக்கை துண்டித்தால் தங்கப் பரிசு என விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி அறிவித்தார். இதனால் தி.மு.க.வினர் ஆத்திரம் அடந்தனர். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்து மாவட்ட பாரதீய ஜனதா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரவு பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும், காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எச்.ராஜா வீட்டில் ஒரு கும்பல் கல்வீசி தாக்கி உள்ளது. ஜன்னல் கண்ணாடிகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப் படுத்தி விட்டு அந்த கும்பல் தலைமறைவாகி விட்டது.
அதன் பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சபேசன் வீட்டிலும் `மர்ம' கும்பல் கற்களை வீசி தாக்கி, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியது. அங்கிருந்த பாஜக கொடி கம்பங்களையும் `மர்ம' கும்பல் வெட்டி சாய்த்தது. இந்த சம்பவத்தால் காரைக் குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கேள்விபட்டதும் பாஜக தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் தென்னவன் வீட்டு, தி.மு.க. நகர செயலாளர் கணேசன் வீடு, தி.மு.க. மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நாராயணன் வீட்டிலும் சரமாரியாக கற்களை வீசினர். திராவிட கழக மாவட்ட தலைவர் சாமி சமதர்மம் வீட்டிலும் கற்கள் வீசப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் காவல்தறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.