வேடச்சந்தூர் அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
தேனியில் இருந்து ஜவுளி ஏற்றிய லாரி ஒன்று நேற்று இரவு ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை பெரியகுளத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி என்ற இடத்தில் அதிகாலை சென்று கொண்டு இருந்தது. அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில், ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த அப்துல்பாரி (44), பாபு (29) மற்றும் பெயர் தெரியாத இன்னொருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயம் அடைந்த அகமது பாட்சா (35) திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ருத்திரசேகரன், ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் விரைந்தனர். ஆம்னி வேனில் சிக்கிய 3 பேரின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.