ராமர் பாலம் விவகாரத்தை வைத்து நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சிக்கிறது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தலைமன்னாருக்கும் தனஷ்கோடிக்கும் இடையில் 30,000 மீட்டர் நீளத்திற்கு ஆதம் பாலம் பரவியுள்ளது. இதில் 300 மீட்டரில் மட்டுமே கால்வாய் அமைகிறது. இது மொத்தத்தில் ஒரு விழுக்காடு மட்டுமே என்றும் "நாங்கள் எதையும் அழிக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கனவை இத்திட்டத்தின் மூலம் நினைவாக்கப் போகிறோம். ஆதம்பாலம் பகுதியில் நடைபெறும் பணிக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாக் நீரிணைப்புப் பகுதியில் வேலை செய்ய அனுமதித்துள்ளது. எனவே மொத்தப் பணியும் தடைபட்டதாக அர்த்தமல்ல. சேது சமுத்திரத்திட்ட எதிர்ப்பாளர்களை பாஜகவினரும், அவர்களின் மதம் சார்ந்த நண்பர்களும் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் கால்வாயை வேறு தடத்தில் அமைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தக் கூடாது என்று டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார்.
நாங்கள் எல்லா ஆச்சாரியார்களிடமும் பேசிவிட்டோம். அவர்களுக்கு எல்லா உண்மைகளையும் விளக்கிவிட்டோம். கடந்த 1999 ஆண்டு வேலை தொடங்கியது முதல் 14 முறை பொதுமக்கள் கருத்தைக் கேட்டுள்ளோம். அப்போதெல்லாம் எதிர்ப்பைக் காட்டாதவர்கள் இப்போது கையிலெடுப்பது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்குத்தான். இந்த சிக்கலைப் பெரிதுபடுத்துவதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி வாக்குவங்கியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. குறிப்பாக குஜராத் தேர்தலை முன்னிறுத்தித்தான் இச்சிக்கல் எழுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.