தனது கணிப்புப்படி 2008க்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று கூறியிருந்த பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இடதுசாரிகள் மற்றும் திமுக ஆகியவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு நிலையில்லாத சக்திகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசுடன் இடதுசாரிகளுக்கு ஒருமித்த கருத்து இல்லை. தமிழகத்தில் உள்ள திமுகவும் சேதுபால விவகாரத்தில் தனது சொந்தக் கருத்துக்களைக் கூறிவருகிறது. இடதுசாரிகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு எதிரான இரண்டாவது நிலையற்ற சக்தியாக திமுக உருவாகி வருகிறது என்று அத்வானி கூறினார்.
மேலும் ராமாயணம் பற்றியும், ராமர் பாலம் பற்றியும் தான் கூறியுள்ள கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராமர் பாலம் விவகாரத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எந்த அமைச்சகம் பொறுப்பு என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்வானி கேட்டுக் கொண்டார்.