ராமர் பற்றி தான் கூறிய கருத்துக்களில் தெளிவாக உள்ளதாகவும், வால்மீகியின் ராமாயணத்தை படித்து விட்டு அத்வானி தன்னுடன் விவாதிக்க வரட்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானி, தமிழக முதல்வர் கருணாநிதி ராமன் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
"தமிழக முதல்வர் ராமனைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். கருணாநிதி ஒரு நாத்திகர் என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன். ஆனால் தலைமைப் பதவிகளை வகிப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கைகள் மீது அவமதிப்பைத் திணிக்கக் கூடாது குறிப்பாக மதவிவகாரங்களில் அவ்வாறு நடக்கக்கூடாது" என்று அத்வானி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, "நான் எனது கருத்தில் நிலையாக உள்ளேன். அதைத் திரும்பப் பெற முடியாது. வால்மீகியே கூட இராமனை குடிக்கு அடிமையானவன் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே வால்மீகி எழுதிய இராமாயணத்தைப் படித்துவிட்டு என்னுடன் விவாதத்திற்கு வருமாறு அத்வானியை நான் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.