இடதுசாரிகள் மற்றும் திமுக ஆகியவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு நிலையில்லாத சக்திகள் என்று பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசுடன் இடதுசாரிகளுக்கு ஒருமித்த கருத்து இல்லை. தமிழகத்தில் உள்ள திமுகவும் ராமர் பால விவகாரத்தில் தனது சொந்தக் கருத்துக்களைக் கூறி வருகிறது. இடதுசாரிகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு எதிரான இரண்டாவது நிலையற்ற சக்தியாக திமுக உருவாகி வருகிறது என்று அத்வானி கூறினார்.
மேலும் ராமாயணம் பற்றியும், ராமர் பாலம் பற்றியும் தான் கூறியுள்ள கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராமர் பால விவகாரத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எந்த அமைச்சகம் பொறுப்பு என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானி கேட்டுக் கொண்டார்.