சமூக நலத்துறையின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தல் வேண்டும்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண்ணின் வயது 18ல் இருந்து 30க்குள் இருக்க வேண்டும். தாய், தந்தையற்ற ஆதரவற்றவராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு ஏழை விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் நிதியுதவி பெறலாம். இதற்கு வருமான வரம்பு ஏதுமில்லை. பெண்ணின் வயது 20 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். திருமணம் முடிந்து 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.