இன்னும் நான்கைந்து மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.
நெல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அத்வானி பேசுகையில், மத்திய அரசு சார்பில் ராமர் பிறப்பை பற்றி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். சிறுபிள்ளைத்தனமாக மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். பின்னர் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரச்சினைக்காக பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
முன்பு காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்த போதெல்லாம் அவர்கள் ராம ராஜ்ஜியம் பற்றி எப்போதும் பேசுவார்கள். இப்போது அவர்களுடைய நிலை மாறி இருப்பதால், காந்தி சமாதியில் உள்ள ’ஹே ராம்' என்ற வாசகத்தை நீக்கப் போகிறார்களா? என்று அத்வானி கேள்வி எழுப்பினார்
மக்களவைத் தேர்தல் நான்கைந்து மாதங்களில் வரலாம். அதற்காக தொண்டர்கள் தயாராக வேண்டும். நாம் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும் என்று அத்வானி கூறினார்.