மாநில சிறுசேமிப்பு ஆலோசனை குழு துணைத் தலைவராக விஜய டி.ராஜேந்தரை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்!
சமீபத்தில் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தனது கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இனி தனித்தே செயல்படுவோம் என்று கூறினார்.
பின்னர், தி.மு.க. கூட்டணியில் உங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் கருணாநிதியை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய டி.ராஜேந்தருக்கு புதிய பதவியை முதல்வர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜய டி.ராஜேந்தரை தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்து இன்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதவியை எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரகுமான்கான் ஆகியோர் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.