சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்கள் நேற்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினர். அப்போது, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த யோசனையை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான சேது சமுத்திர திட்டத்தை முடக்கிட மதவாத சக்திகள் திட்டமிட்டு செயல்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்திட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதற்கு முதலமைச்சர் கருணாநிதி, தோழமை கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி 24ஆம் தேதி மாலை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்திடலாம் என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.