பெங்களூரில் இருந்து தமிழகம் வந்து கொண்டிருந்த பேருந்தை மர்ம கும்பல் தீ வைத்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே கருகி பலியாயினர். பலர் காயம் அடைந்தனர்.
தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று நேற்று இரவு 8,30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். பேருந்தை அப்துல்குஷீத் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக தேவதாஸ் இருந்தார்.
ஓசூர் சாலை பொம்மனஹள்ளி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது. இரவு 9.30 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று பேருந்தை வழிமறித்தது.
பேருந்தை நிறுத்தினார் டிரைவர் அப்துல்குஷீத். அப்போது அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை பேருந்துக்குள் வீசியது. பின்னர் அங்கிருந்து கும்பல் தப்பியது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
தீ மளமளவென பிடித்து பேருந்து முழுவதும் எரிந்தது. இதில் சிக்கிக் கொண்ட 2 பேர் பரிதாபாக இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள் யார் எந்த விவரம் தெரியவில்லை.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரைண நடத்தினர். பேருந்துக்கு தீவைத்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.