கிராம ஊராட்சிகளின் அதிகாரம் பறிக்கவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகளை பராமரிப்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளள அரசாணையில் ஏற்கனவே கிராம ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் அனைத்து கணக்குகளையும் கூட்டாக இயக்குவார்கள் என்று இருந்த நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிராம ஊராட்சி கணக்குகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இயக்கும் வகையிலும் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அந்த செலவீனங்களுக்கு பயன்படுத்தாமல் பல ஊராட்சிகள் செலவிட்டுள்ளதால் மிகப் பெரிய அளவில் மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கான கட்டணம் ஆகியவற்றை அந்த செலவீனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஏற்றவாறு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கிராம ஊராட்சியின் எந்தவொரு அதிகாரமும் பறிக்கப்படவில்லை. கிராம ஊராட்சித் தலைவரும், துணைத் தலைவரும் கணக்குகளை கூட்டாக இயக்குவது குறித்து இதுவரை பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெளிவுப் படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.