தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழகம் எட்டும் என கருணாநிதி உறுதிப்பட கூறினார்.
தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ’கனெக்ட்-2007' என்ற கருத்தரங்கம் சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 46 சதவீத வளர்ச்சி. தகவல் தொடர்பு துறையில் பெரிய நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் உருவாகி வருகிறது. இது சென்னையில் மட்டுமின்றி மாநிலத்தின் இதர பகுதிகளிலும் பரவி வருகிறது என்றார்.
இந்த ஆண்டு ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திறமை வெளிப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்போம். உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உலக தரத்தில் தொழில் உற்பத்தியை மேம்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்திய தகவல் தொடர்பு தொழில் நுட்ப மையம் சென்னை அருகே அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கூடுதலாக ஐ.ஐ.டி. அமைக்க மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம் என்றும் கருணாநிதி கூறினார்.