சேது சமுத்திர திட்டம் அண்ணாவின் கனவு திட்டம். இதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைபாடு. அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு சட்ட ரீதியாகவோ, வேறு எந்த ரீதியாகவோ எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
சேது சமுத்திர திட்டம் அண்ணாவின் கனவு திட்டம். இதை நிறைவேற்றியே தீர வேண்டும். தமிழர்களுக்கு தேவையான இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எந்த மதத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. எந்த இடையூறும் இல்லாமல் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வைகோ கூறினார்.
இலங்கை தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் சேகரித்து வைத்த உணவு மற்றும் மருத்துவ பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப அனுமதிக்காமல் இருப்பது மன்மோகன்சிங் அரசு தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம். உடனடியாக அந்த பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.