ஈரோடு : நகர பஞ்சாயத்தை கண்டித்து பாடை கட்டி போராட்டம்!
ஈரோடு செய்தியாளர் என். வேலுச்சாமி
குடியிருப்புப் பகுதிக்குள் புகும் குட்டை தண்ணீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத நசியனூர் நகர பஞ்சாயத்தை கண்டித்து பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, தண்ணீரில் மூழ்கடிக்கும் நூதனப் போராட்டத்தை சிந்தன்குட்டை மக்கள் நடத்தினர்.
ஈரோடு அடுத்து உள்ளது நசியனூர் பேரூராட்சி. இதற்குட்பட்ட சிந்தன்குட்டை, சி.எஸ்.ஐ. நகர், நெசவாளர் காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சிந்தன்குட்டை எனும் குட்டை உள்ளது. மழைக் காலங்களில் வரும் தண்ணீர் இக்குட்டையில் சேகரிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. இந்தக் குட்டையில் மீன் வளர்க்கும் தொழிலும் நடக்கிறது. மீன் வளர்ப்பை அதிகரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்பட்டதால், நசியனூர் நகர பஞ்சாயத்து சார்பில் குட்டை ஆழப்படுத்தப்பட்டு, வடிகால் மட்டம் உயர்த்தப்பட்டது.
குட்டையின் வடிகால் மட்டம் உயர்ந்து குட்டையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் சிந்தன்குட்டை குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்து கொண்டது. மக்கள் தண்ணீரின்றி சிரமப்படக் கூடாது என்பதற்காக குட்டையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த இரண்டு பொது அடிகுழாய்களும் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி குடியிருப்பு கழிவுநீர் இந்த குட்டைக்கு சென்று கலக்குமாறு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிகப்படியான தண்ணீர் குட்டையில் உள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி அவை திரும்பவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கொண்டுள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானோர் கொசுக்கடியால் மிகவும் துன்புற்று வருகின்றனர். மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சிந்தன்குட்டை, சி.எஸ்.ஐ.,நகர், நெசவாளர் காலனி மக்களுக்கு சொந்தமான சுடுகாடும் குட்டையை ஒட்டி அமைந்தள்ளது. குட்டையை ஒட்டி அமைந்திருந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழித்தடமும் நீரில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஈரோட்டில் நடந்த ஜமாபந்தியில் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், தனி தாசில்தாருக்கு (எஸ்.சி.,) பரிந்துரை செய்தார். தனி தாசில்தார், "குட்டையின் மட்டத்தை குறைத்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி நசியனூர் நகர பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொதிப்படைந்த சிந்தன்குட்டை மக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து நேற்று நூதனப் போராட்டம் நடத்தினர். அதில், நசியனூர் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தை உருவ பொம்மையை பிணமாக சித்தரித்து, பாடை கட்டினர். பின்னர், தாரை தப்பட்டை இசையுடன் பாடையை வாலிபர்கள் தூக்கிக் கொண்டு குட்டையை நோக்கி நடந்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இறுதியில் குட்டைக்குள் இறங்கி பாடையை தூக்கி வீசி தண்ணீரில் மூழ்கடித்தனர்.