கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டம், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கேரளாவில் மழை பெய்து வருவதால் 2 நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது. நேற்றும் மழை தொடர்ந்து பெய்ததால் இரவில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளித்தனர். ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது. குளிப்பதற்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் பயந்து குளிக்காமல் சென்றனர்.
இதேபோல் சிற்றருவி, புலியருவி, செண்பகா தேவி அருகி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருகிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.