ராமரை பற்றி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு இந்துக்கள் மனதை புண்படுத்தியதை கண்டித்து இன்று நகல் எரிப்பு போராட்டம் நடத்திய வெங்கையா நாயுடு, இல.கணேசன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் தொல்பொருள் துறை, ராமர் உள்பட ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்ததற்கு வரலாற்று ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு பா.ஜ உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதை கண்டித்து நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அத்வானி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ. சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நகல் எரிக்க முயன்ற அகில இந்திய பா.ஜ.க. துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர் எம்.பி., பொதுச் செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.