தங்களின் உயிருக்கு இந்த உண்ணாநோன்பு தாங்காது. தாங்கள் எடுத்துள்ள முயற்சியை தமிழக அரசு சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். தங்களின் உண்ணா நோன்பினை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். ஈரோட்டில் இருந்து 2 நாட்களில் திரும்பியவுடன் சந்தித்து பேசுவோம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் 2 நாளாக பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறனுக்கு முதலைமச்சர் கருணாநிதி எழுதிய உள்ள கடிதம்:
பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு, சேலம் செல்லும் ரயிலில் இருந்து இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தங்களின் உயிருக்கு இந்த உண்ணாநோன்பு தாங்காது. தாங்கள் எடுத்துள்ள முயற்சியை தமிழக அரசு சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன்.
இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணா நோன்பினை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். ஈரோட்டில் இருந்து 2 நாட்களில் திரும்பியவுடன் சந்தித்து பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ராமதாஸ்: இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கான உணவு மற்றும் மருந்து பொருட்களை இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.
அவரது இந்த கோரிக்கையும், அவரது உணர்வும் நியாயமானது. ஆனாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு தனது உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் மேற்கொள்வது ஏற்ற வழிமுறையல்ல. எனவே பழ.நெடுமாறன் தனது உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் வித்துள்ளார்.