கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் 6 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 1.7.07 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 1.7.07 அன்று முதல் 6 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 817 கோடி ரூபாய் செலவாகும்.