தர்மபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருமண வீட்டிற்கு சென்ற 5 பேர் சம்ப இடத்திலேயே பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் புதுவயலை சேர்ந்த செல்வம் (37) தனது உறவினர்களுடன் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கண்டனூரில் நடக்கும் உறவினர் ஒருவரது திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து 7 பேர் இன்று பேருந்தில் ஓசூருக்கு வந்தனர். அங்கிருந்து காரைக்குடிக்கு பேருந்து கிடைக்காததால் பெங்களூரில் இருந்து கார் வரவழைக்கப்பட்டு 7 பேரும் கண்டனூர் புதுவயலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு தர்மபுர் அருகே தேவரசம்பட்டி பிரிவு சாலையில் கார் வந்தபோது சேலத்தில் இருந்து ஆந்திரா நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த சாந்தி (30), மாணிக்கம் (70), யோவான் (45), கணேசன் (35), கார் டிரைவர் கணேசன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் செல்வம் (37), உடையாத்தாள் (65), கருப்பையா (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் செல்வம், உடையாத்தாள் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.