அண்ணாவின் 99 வது பிறந்தநாள் பரிசாக கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அவசர சட்டம் வரும் 15 ஆம் தேதி கொண்டு வரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் வாழும் சிறுபான்மை சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும். 2006ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.06 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே 24.5.06 அன்று ஆளுநரின் முதல் உரையில், சிறுபான்மைச் சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்கு தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும்,
2006-07 ஆம் ஆண்டிக்கான நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களு்கு இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக நீதிபதி ஜனார்த்தனனை தலைவராக கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு 2வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை, கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை, முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணாவின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.07 முதல் தனி இடஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.