பால் உற்பத்தியாளர்களுக்கு சரியான முறையில் பணப் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் வைத்திருந்து ஏழை எளிய பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரத்தை நசுக்கி வரும் தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தி.மு.க. அரசு தொடர்ந்து அநீதியை இழைத்து வருவதால் பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு கடந்த 3.7.07 அன்று பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் பால் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் லிட்டருக்கு 14 ரூபாய் வசூலித்து வருகிறது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான பாலினை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து நல்ல விலைக்கு விற்று கொள்ளைலாபம் சம்பாதித்து வரும் கூட்டுறவு ஒன்றியம், கறவை மாடுகளை வைத்துக் கொண்டு தங்கள் பிழைப்பை நடத்தி வரும் பால் உற்பத்தியாளர்களை பல்வேறு வகையில் ஏமாற்றி வருவது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றோடு மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்களுக்கு சரியான முறையில் பணப் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது, ஒவ்வொரு உற்பத்தியாளர்களிடமிருந்தும் குரூப் இன்சூரன்ஸ்சுக்காக 50 ரூபாய் பிடித்துக் கொண்டு அதற்கான விவரங்களை தெரிவிக்கலாம் இருப்பது, பல்வேறு விதங்களில் ஏழை எளிய பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரத்தை நசுக்கி வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (13ஆம் தேதி) காலை 11 மணிக்கு மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.