நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் பேருந்துகளை சேவையில் அறிமுகப்படுத்தி வரும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரில் 4 வழித்தடங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது!
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலைமச்சர் கருணாநிதி உத்தரவின்படியும் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படியும் அதிநவீன குளர்சாதனப் பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கீழ்கண்ட வழித்தடத்தில் இயக்க உள்ளது.
தடம் எண் 21ஜி தாம்பரம் - பிராட்வே
தடம் எண் 19ஜி பிராட்வே - கோவளம்
தடம் எண் 70 தாம்பரம் - ஆவடி
சென்னை விமான நிலையம் - பிராட்வே
இது முற்றிலும் குளிர்சாதனம் செய்யப்பட்ட தாழ்தளப் பேருந்து. இதன் தளத்தை 3 நிலைகளில் உயர்த்தவோ, குறைக்கவோ இயலும். பேருந்து தளத்தை இடது புறம் முழுவதுமாக சாய்த்து இறக்கி ஊனமுற்றோர் மற்றும் முதியோர் எளிதாக ஏறி இறங்குவதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் நடுப்பகுதி கதவு மற்றும் பின் பகுதி ஆகியவற்றில் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திரை ஓட்டுநரின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் இரு தானியங்கி கதவுகள் சென்சாருடன் பயணிகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள் மூடும் போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் கதவுகள் உடனே தானாக திறந்துவிடும்.
பயணிகளுக்கு தகவல் கொடுக்க ஒலி வாங்கி (மைக்) மற்றும் ஆம்பிளிஃபையர் பொருத்தப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் அவ்வப்போது பயணிகளுக்கு தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமையான இசை ஒலிக்க நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
லேப்-டாப் உபயோகிப்பவர்களுக்கு தனியாக வசதியும், செல்பேசியை ரீ-சார்ஜ் செய்து கொள்ளவும் சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.