பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் இணைக்க சம்மதித்துள்ளது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அம்முடிவை எதிர்த்து வரும் 19 ஆம் தேதி ரயில் மறியல் செய்யப் போவதாகவும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
சேலம் ரயில் கோட்ட பிரச்சனை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்த சில எம்.பி.க்களும், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலுவும், பா.ம.க. வேலுவும் கலந்து கொண்ட கூட்டத்தில் தற்போது மதுரைக் கோட்டத்தில் இருக்கிற கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையுள்ள 79 கி.மீ. ரயில் பாதையை பாலக்காடு கோட்டத்தில் இணைப்பதற்கு, எல்லை மறுவரையறை செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அந்த தீர்மானத்தில் இரு மாநில எம்.பி.க்களும் கையெழுத்து இட்டனர் என்றும் ரயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் அறிவித்து இருக்கிறார். பொள்ளாச்சி- கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் இணைக்க முடிவு செய்து இருப்பது தமிழகத்துக்கு குறிப்பாக பொள்ளாச்சி வட்டார மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும் என்று வைகோ கூறியுள்ளார்.
பொள்ளாச்சி-கிணத்துக்கடவு பாதையை கேரளத்துக்கு தாரைவார்க்கும் துரோகத்தை தி.மு.க. அரசு செய்து உள்ளது. குறிப்பிட்ட சில எம்.பி.க்கள் கையெழுத்து இடுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது? முடிவெடுக்க அவர்கள் யார்? சம்பந்தப்பட்ட பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணனுக்கு இது பற்றி விவாதிக்க ரயில்வே அமைச்சகம் எந்த அழைப்பும் அனுப்பவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒரு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கும் விதத்தில் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட இந்த முடிவை செயல்படுத்தக் கூடாது, பொள்ளாச்சி பகுதியை தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்டத்தில் நீடிக்கும் வரையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தவும் வருகிற 19ஆம் தேதி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ம.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் பொருளாளர் மு.கண்ணப்பன், பொள்ளாச்சி எம்.பி. டாக்டர் கிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் ஆகியோர் முன்னிலையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து மேற்கொண்டுள்ள முடிவினை மறுபரிசீலனை செய்யக்கோரி லாலு பிரசாத் யாதவுக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.