ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர்கள் மறியல் போராட்டத்தில் இல.கணேசன், திருநாவுக்கரசர் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்!
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பலத்தை இடிக்க கூடாது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராமர் சேது பாதுகாப்பு இயக்கம், இந்து முன்னணி, பா.ஜ.க ஆகியவை இணைந்து இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தியது.
சென்னையில் அண்ணா சாலையில் அண்ணா சிலை முன்பு பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தங்க சாலை மணிக்கூண்டு அருகே பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், இந்து முன்னணி பொறுப்பாளர் பொன் பாண்டின், ஜனதா கட்சி சந்திரலேகா ஆகியோர் தலைமையில் நடந்த மறியலில் 400 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடபழனியில் நடந்த மறியலில் பா.ஜ.க. எம்.பி. திருநாவுக்கரசர், இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.