மதுரை கோட்டத்தி்ல் இருந்து 79 கி.மீ. தூர ரயில் பாதையை பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றியதன் மூலம் புதிதாக உருவாக்கப்படவுள்ள சேலம் கோட்டம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்!
பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்படும் சேலம் கோட்டம், அதைவிட பெரிதாக இருப்பதாகக் கூறி கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு காட்டிவந்ததையடுத்து இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டி ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், பாலக்காடு - பொள்ளாச்சி இடையிலான 58 கி.மீ. ரயில் பாதையும், பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையிலான 21 கி.மீ. ரயில் பாதையும், மதுரை கோட்டத்தில் இருந்து பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றப்படுவதால், இதற்குமேல் சேலம் கோட்டமும், பாலக்காடு கோட்டமும் சம அளவு ரயில் பாதையைக் கொண்ட கோட்டங்களாக இருக்கும் என்று கூறினார்.
செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பதில் மற்றொரு தேதியில், தனது தலைமையில் முதலமைச்சர் கருணாநிதி சேலம் ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைப்பார் என்று லாலு பிரசாத் கூறினார்.
பாலக்காடு, சேலம் கோட்ட பிரச்சனைக்குத் தீர்வாக ரயில்வே அமைச்சர் லாலு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கேரளத்தைச் சேர்ந்த கருணாகரன், கிருஷ்ணதாஸ், சந்திரன் பிள்ளை, வீரேந்திர குமார் (ஐ.ஜ.த.), குரியன் (காங்கிரஸ்), சந்திரப்பன் (இ. கம்யூ.), தாமஸ் (இ.ஜ.த.) ஆகியோரும், தமிழகத்தின் சார்பாக கப்பல், சாலை போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, திருப்பெரும்புதூர் கிருஷ்ணசாமி (தி.மு.க.), செந்தில் (பா.ம.க.), மோகன் (மார்க்சிஸ்ட்), சுப்பராயன் (இ.கம்யூ.) ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு சேலம் கோட்டம், பாலக்காடு கோட்டத்தில் இருந்து 623 கி.மீ., திருச்சியில் இருந்து 135 கி.மீ. ஆகியவற்றுடன் 85 கி.மீ. புதிய ரயில் பாதையுடன் செயல்படத் துவங்கும்.
பாலக்காடு கோட்டம் 509 கி.மீ., மதுரை கோட்டத்தில் இருந்து 79 கி.மீ., புதிதாக 36 கி.மீ. ரயில் பாதையுடன் இயங்கும்.