காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கான எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறினார்.
எப்போது தேர்தல் வந்தாலும் மத்தியில் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளதால் இடதுசாரி கட்சிகள் தேர்தலை விரும்பவில்லை. ஆனால் இந்த சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்போது மத்திய கூட்டணியில் மாற்றம் வரும். தேசிய கூட்டணியில் மாற்றம் வரும்போது தமிழக கூட்டணியிலும் மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தே.மு.தி.க. உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாங்கள் நட்புடன் பழகி வருகிறோம். அது அரசியல் லாபத்தில் முடிந்தால் தவறில்லை என இல.கணேசன் கூறினார்.
பா.ஜ.க.விற்கு கொள்கை ரீதியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிராக உள்ளன. காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான எங்கள் கதவு திறந்தே உள்ளன. அந்த கூட்டணி எப்படி அமையும் என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் குறிப்பிட்டார்.