மதுரை மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், மாநகராட்சியின் சீர்கேட்டை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மதுரை மாநகரின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. அரசு எவ்வித நிதியுதவியும் வழங்காமலும், எனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமலும் காலம் தாழ்த்தி வருவதின் மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உணர்ந்து எனது ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அ.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நாளை (12ம் தேதி) காலை 10 மணிக்கு தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.