தொழிற்சங்கங்ளுடன் பேச்சுவார்த்தை தொடங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்புத் தலைவர் லெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஒன்பது சங்கங்களை உள்ளடக்கிய வங்கித் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு, இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போது உள்ள ஓய்வூதிய திட்டத்தில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும், வங்கிப் பணிகளை தனியாருக்கு அளிக்கக் கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறது என கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக, கடந்த மார்ச் மாதத்தில் முதன்மை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வங்கி நிர்வாகங்களின் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் தவறியதை கண்டித்து நாளை (12ஆம் தேதி) வேலை நிறுத்த அழைப்பினை சங்கம் விடுத்திருந்தது. இந்த நிலையில், 15 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூட்டமைப்புத் தலைவர் லெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.