மருத்துவ படிப்புகாலம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த வரபிரசாத், விடுதலை விரும்பி, தினேஷ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கட்டாய கிராமப்புற சேவை என்ற பெயரில் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்தும், கட்டாய சேவை மூலம் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்கள் ஒழிக்கப்படுவதை எதிர்த்தும், தமிழகம் முழுவதும் கடந்த 3ஆம் தேதியில் இருந்து மருத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இதற்கு தமிழக முதலமைச்சரும் உறுதியான ஆதரவு அளித்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும், டாக்டர்கள் சங்கத்தினரும் ஆதரவளித்தார்கள் என்று போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.
8 மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 14 மாணவர்களை அழைத்து மத்திய மந்திரி அன்புமணி பேசினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அங்கு நாங்கள் கூறிய கருத்துகள் குறித்து அதிகாரிகளுடனும், மாநில அரசுகளுடனும் கலந்து பேசி இணக்கமான முடிவை அறிவிப்பதாக அவர் உறுதி அளித்தார். எங்களது கோரிக்கைக்கு அவர் நல்ல தீர்வினை காண வேண்டும். எங்களுக்கு ஆதரவளித்த முதல்வர் கருணாநிதி, மத்திய அரசை இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மத்திய மந்திரி அன்புமணியின் உறுதிமொழியை ஏற்றும், முதலமைச்சரின் ஆதரவான நிலைப்பாட்டை நம்பியும் போராட்டத்தை தற்சமயம் கைவிடுகிறோம். ஆனால், உறுதியளித்ததற்கு எதிராக மத்திய மந்திரி செயல்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.