நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சரத்குமார், சங்க உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
நடிகர் சரத்குமார் கட்சி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தென் இந்திய நடிகர் சங்க அவசர கூட்டம் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்தது. சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஓட்டு மொத்த செயற்குழு உறுப்பினர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும் சரத்குமாரின் ராஜினாமாவை ஏற்கவில்லை. இன்னும் 2 வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அவர் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் எடுக்கிற முடிவே முக்கியமானது என்று ராதாரவி கூறினார்.
இது குறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் என்னை தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டனர். கட்சி வேலைகள் அதிகம் இருக்கிறது. நடிகர் சங்க வேலையும் உள்ளது. இரண்டு வேலைகளையும் கவனிப்பது சிரமமாக உள்ளது. அதனால்தான் ராஜினாமா செய்தேன் என்றார்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. சங்கத்துக்கு தொடர்ந்து வருமானம் வர வேண்டும். எனவே இந்த பணியை நிறைவேற்றும் வரை தொடர்ந்து நீங்கள் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் எனது ராஜினாமாவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அடுத்த முறை நிச்சயம் போட்டியிட மாட்டேன் என்று சரத்குமார் கூறினார்.