தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி தொழில் கல்லூரிகளில் (மருத்துவம் சார்ந்தவை) நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. வரும் 18ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்லூரிகளின் கூட்டமைப்பு செயலாளர் ஐசரி கணேஷ் கூறினார்.
பல் மருத்துவம் (1120 இடங்கள்), பார்மசி (1840), நர்சிங் (2050) சித்தா-ஆயுர்வேதா-ஓமியோபதி (590), பிசியோதெரபி (1680), ஆகுபேஷனல் தெரபி (150) போன்ற படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 430 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை கோட்டூர்புரத்தில் உள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி இன்று முதல் (10ஆம் தேதி) பெற்றுக் கொள்ளலாம். நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே வசூலிக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 18ஆம் தேதி கடைசி நாள்.
22ஆம் தேதி தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 20 இடங்களில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.