நீதிபதிகள் தேர்வில் மாற்றம்: கி.வீரமணி வலியுறுத்தல்!
திருச்சி செய்தியாளர் ஆர்.சுப்பிரமணியன்
நீதிபதிகளை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சித் தலைவர் கி.வீரமணி கூறுகையில், மாவட்ட நீதிபதி நியமனம் வரை 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை 3 மூத்த நீதிபதிகள் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இந்த நிலையை மாற்றி சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை கொண்ட மத்திய பணியாளர் தேர்வாணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நியமனக்குழுவில் உள்ள 3 நீதிபதிகளும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இதே போன்ற நிலை உச்ச நீதிமன்றத்திலும் உள்ளது. இதற்கு மாற்று தேவை சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பதவியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை தமிழக முதல்வர் இயற்ற வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.
வரும் 29ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை முதல்வர் கருணாநிதி தலைமையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கி வைக்கிறார் என்றார் வீரமணி.